சென்னை, ஏப். 11: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் கேப்டன் டி.வி. வரும் ஏப்ரல் 14 முதல் தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.
இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டி.வி.யின் சோதனை ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) அதிகாலை முதல் துவங்கியுள்ளது.
வரும் ஏப்ரல் 14 முதல் முழுமையான நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூர்வமான ஒளிபரப்பு தொடங்கும். மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளை சிறந்த வல்லுநர்களின் உதவியுடன் உருவாக்கியிருக்கிறோம். இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை முன்னேற்றும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.கல்வி, பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிகழ்ச்சிகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு சிறப்பாக ஒளிபரப்பவுள்ளோம்.
இதுவரை எந்த சேனலும் செய்திராத வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தனித் தனியே ஒரு குழுவை அமைத்து செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்குகிறோம்.
வரும் மே 1 முதல் எங்கள் டி.வி.யின் செய்திகள் பாரபட்சமின்றி ஒளிபரப்பாகும். அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் கேப்டன் டி.வி.யின் இன்னொரு புதிய சேனலும் தனது ஒளிபரப்பைத் தொடங்கவுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் "கேப்டன் முரசு' என்ற வார இதழ் விரைவில் வெளியாகவுள்ளது.
கேப்டன் டி.வி. ஒளிபரப்பைத் தொடங்குவது குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார் அதன் நிர்வாக இயக்குநர் எல்.கே.சுதீஷ்.
No comments:
Post a Comment