
திருச்சி : இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் தேர்தல் இன்று திருச்சியில் நடக்கிறது. காங்கிரஸ் என்றால் கோஷ்டி இல்லாமா இருக்கும் . அவரவர் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்கள் என குமுறலுடன் இருந்த தொண்டர்கள் தங்களது கோஷ்டி கானத்தை ஆவேசமாக எழுப்பி எம். எல். ஏ., வை அடித்து விரட்டினர். எம். எல்.ஏ., தன்னை தாக்க வந்தவர்களை கல் வீசி விரட்டி தப்பினார். இதனால் அங்கு பதட்டமும் , பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலை பொறுத்த மட்டில் இவர் கோஷ்டி , அவர் கோஷ்டி என பல பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். அவரவர் ஆதரவாளர்களை பதவியில் நியமிக்கும் மும்முரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டுப்போட தகுதியானவர்களுக்கு விருந்து, டூர் , உ . பானம் என சரியான கவனிப்பு நடந்து வருகிறது.
ஏன் இங்கே வந்தாய் ? : இன்று தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தபோது மாயவரம் எம்.எல்.ஏ., ராஜ்குமார் அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார். இவரது வருகைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ., ராஜ்குமாரை நோக்கி ஏன் இங்கே வந்தாய் என கேட்டனர். தொடர்ந்து ஆவேச வாக்குவாதம் நடந்தது. இருதரப்பினரும் மோதும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் எம்.எல்.ஏ., ராஜ்குமார் வேஷ்டி உருவப்பட்டது. இதனையடுத்து அவர் கல்லை எடுத்து வீசி தன்னை காப்பாற்றி கொண்டார். இதில் சீர்காழி கொள்ளிடம் வட்டார தலைவர் நடராஜன் காயமுற்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் எம்.எல்.ஏ.,வோ எனது வேட்டியை யாரும் உருவவில்லை. நான் பேண்ட் போட்டிருந்தேன் என கூறி மானத்தை தக்க வைக்க முயற்சித்தாராம் . இதனை அக்கம், பக்கம் இருந்தவர்கள் நகைப்புடன் தெரிவித்தனர்.
ராகுல் முழு அக்கறை : இந்த தேர்தலை பொறுத்த மட்டில் அகில இந்திய பொதுசெயலர் ராகுல் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். தேர்தல் முறைகேடுகள் இல்லாமல் நடக்க வேண்டும் என கூறி திருச்சி தேர்தல் பணிகள் தொடர்பாக நேரில் விசாரித்து விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த மோதல் சம்பவம் ராகுல் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். காங்கிரஸ் என்றால் கோஷ்டி கானம் இல்லாமலா ?
ஓட்டு யார் போடுவர் ? : தமிழகத்தில் இளைஞர் காங்கிரசுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த சில மாதங்களாக நடந்தது. அதில் 14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். சேர்க்கப்பட்டோரில் 12 லட்சத்து 50 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு கிளை, வட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் சட்டசபை அளவில் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிணைந்து இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு மாநில நிர்வாகிகளையும், தலைவரையும் மற்றும் 39 எம்.பி., தொகுதிகளின் பொறுப்பாளர்களையும் தேர்வு செய்யவேண்டும்.
அதற்காக தேர்தல் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) திருச்சி காஜாமலையில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த தேர்தலில் 4,280 பேர் ஓட்டளிக்கும் தகுதி பெற்றவர் ஆவர் . தேர்தலுக்காக ஏற்பாடுகளை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜோஷி, தமிழக பொறுப்பாளர் சூரஜ், திருச்சி எம்.பி., தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முரளிஷெட்டி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment