Thursday, April 15, 2010

பார்லி., அருகே உண்மையில் அனல் ; டில்லி சாஸ்திரி பவனில் தீ ; திடீர் பதட்டம்



புதுடில்லி: பார்லிமென்ட் அருகே உள்ள சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பார்லி., மென்டில் அனல் பறக்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான நேரத்தில் இங்கு ஏற்பட்டுள்ள தீ விபத்து டில்லி கூடுதலாக சூடேறிக்கொண்டது. இன்று பார்லி., இரு அவைகளும் கூடியதும் சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் , விலைவாசி உயர்வு மற்றும் சசிதரூர் மீதான ஐ.பி.எல்., பிரச்னை என சபையில் எதிர்கட்சிகள் குரல் ஓங்கி ஒலித்தன.

பா.ஜ., சார்பில் யஸ்வந்த்சின்கா மத்திய அரசையும், உள்துறையையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து எழுந்த கூச்சல் குழப்பத்தால் சபை பல முறை ஒத்திவைக்கப்பட்டன. மதியம் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நக்சல்கள் விவகாரம் தொடர்பாக மதியம் அறிக்கை தாக்கல் செய்தார்.



இந்நிலையில் பார்லி.,க்கு அருகே அமைந்துள்ள டில்லி சாஸ்திரி பவன் 7 வது மாடியில் இருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் தொற்றிக் கொண்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைக்கும் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சிறிய அளவில் தீ எரிய துவங்கியதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.



டில்லியில் தொடரும் தீ விபத்துக்கள் : மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கட்டடத்தில் மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்பட பல்வேறு துறை அலுவலகங்கள் அதிகம் உள்ளன. கடந்த 10 நாளில் டில்லியில் பல்வேறு தீ விபத்துக்கள் நடந்தவாறு உள்ளன. இதனால் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன கடந்த ஆண்டில் இதே சாஸ்திரி பவனில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment