Tuesday, April 13, 2010

'வன்முறையை கைவிட்டு பேச மாவோயிஸ்டுகள் வர வேண்டும்'

கோல்கட்டா : 'வன்முறையை நிறுத்திவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்' என்று, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தனியார், 'டிவி' ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த அவர் கூறியதாவது: கூட்டுப் படை நடவடிக்கை முறையாகக் கையாளப்படவில்லை. அது, மே.வங்க ஆளும் கட்சியான மார்க்சிஸ்டுகளுக்குத் தான் உதவுகிறது. அப்படையை மாநில அரசும் ஆளுங்கட்சியும் தான் கட்டுப்படுத்துகின்றன. அப்படையின் நடவடிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டச் செயலர் தீபக் சர்க்கார் தான் முடிவு செய்கிறார்.இதுகுறித்து பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை நான் கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. கூட்டுப் படை நடவடிக்கைத் துவங்கப்படும் முன் என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் ஏன் கூட்டணியில் இருக்கிறோம்? மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். எங்களுக்குக் கடமை இருக்கிறது. கூட்டணியை விட்டு வெளியேறினால் மக்கள் எங்களைக் குற்றம் சாட்டுவர்.மாவோயிஸ்டுகளும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அப்பாவி மக்களைக் கடத்துவதாலும், கொல்வதாலும் என்ன பயன்? திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 1979ல் சுந்தரவனப் பகுதியின் மோரிச்ஜான்பி தீவில் நடந்த படுகொலைகள் உட்பட அனைத்து அரசியல் கொலைகளையும் விசாரிக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment