Sunday, April 11, 2010

காலாவதி மருந்து மோசடியில் மேலும் ஒருவர் கைது


சென்னை :காலாவதி மருந்து வர்த்தகம் செய்ய மீனாட்சி சுந்தரத்திற்கு உதவியாக இருந்த நிறுவன மேலாளரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். போலி மற்றும் காலாவதி மருந்து சப்ளை, ஐதராபாத்தில் இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், ஆந்திராவுக்கு தனிப்படை போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.



காலாவதி மற்றும் போலி மருந்து வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வசம் மாறியதில் இருந்து, இதில் தொடர்புடைய பலர் தினசரி கைது செய்யப்பட்டு வேட்டை தொடர்கிறது. இந்த வகையில், நேற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் நேற்று, போலி டாக்டர், காஞ்சிபுரம் மருந்து விற்பனை பிரதிநிதி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காலாவதி, போலி மருந்து மோசடி மன்னன் மீனாட்சி சுந்தரத்தின் மேலாளர் ஒருவரும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். காலாவதி மற்றும் போலி மருந்து விவகாரங்கள் இரண்டிலும் மீனாட்சி சுந்தரத்திற்கு தொடர்பு இருப்பதால், மீனாட்சி சுந்தரத்தை சார்ந்தவர்கள் அனைவர் மீதும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் நடவடிக்கை பாய்ந்து வருகிறது.மீனாட்சி சுந்தரம் நடத்தி வந்த மீனா ஹெல்த் கேர், வசந்தம் மீனா ஹெர்பல் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்புள்ளது நிரூபணமாகி வருகிறது.



சமீபத்தில், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏழு பேரை காவலில் எடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.மேலாளர் கைது: இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் தங்கள் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளனர். மீனாட்சி சுந்தரத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரின் வசந்தம் மீனா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாளரான அயனாவரத்தைச் சேர்ந்த முனுசாமி(58) என்பவரை நேற்று கைது செய்துள்ளனர்.இவர், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இப்பதவியில் இருந்து வருவதும், பிரதீப் சோர்டியா மற்றும் சஞ்சய்குமாரின் ஜி.எச்., பார்மாவில் இருந்து மருந்துகளை பெற்று, அதை வர்த்தகத்திற்கு திருப்பியதில் முக்கிய பங்கு இவருக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.



சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், காலாவதி மற்றும் போலி மருந்து விவகாரத்தில், தற்போது வரையில் 10க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புள்ள பாஸ்கரன் என்பவர் மட்டும் இன்னும் சிக்காமல் தப்பித்து வருகிறார்.இவர், தனது சொந்த ஊரான தஞ்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் தான், சஞ்சய்குமாருடன் சேர்ந்து காலாவதி மற்றும் போலி மருந்தை சந்தைப்படுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் பிடிபடும் பட்சத்தில், இதில் தொடர்புடைய மேலும் பலர் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.



மீண்டும் சிறை: இது தவிர, போலி, 'பிரிமுலேட்-என்' மருந்து வழக்கில் தொடர்புடைய சீனிவாசன், ஹேமந்த்குமார் மற்றும் கண்ணன் ஆகியோரது போலீஸ் காவல் முடிந்த நிலையில், நேற்று எழும்பூர் மாஜிஸ்திரேட் ஸ்ரீதேவி முன் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.முன்னதாக இவர்களிடம் நடத்தப்பட்ட இறுதிக்கட்ட விசாரணையில் , ஐதராபாத் ராமுலுவுடன் தொடர்புடைய கரண்குமார் என்பவர் பற்றிய தகவலும் கிடைத்துள்ளது. ஏற்கனவே ராமுலு, ஆதிகேசவன், ஸ்ரீதர் ஆகிய மூவரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வரும் நிலையில் அந்த, 'லிஸ்டி'ல் கரண்குமாரையும் சேர்த்துள்ளனர்.அந்த விசாரணையின் போது சீனிவாசன் மற்றும் கண்ணனின் இருப்பிடங்கள் சோதனை செய்யப்பட்டன. சோதனையில், சீனிவாசனின் லேப்-டாப், கம்ப்யூட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவற்றில், மருந்துகள் வாங்கியது, வினியோகித்தது தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளன.கண்ணன் வீட்டில் நடத்திய சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரைவில் சி.பி.சி.ஐ.டி., போலீசார், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு ஏதேனும் உள்ளதா என விசாரணையை துவக்குவர் என கூறப்படுகிறது.ஐதராபாத்தில் இருந்து போலி மற்றும் காலாவதி மருந்துகள் வந்திருப்பது தெரியவந்ததால், இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.

No comments:

Post a Comment