சென்னை : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நேற்று நியமித்தது.
தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்க வேண்டும் என்று, கடந்த ஏப்ரல் மாதம் பேரவையில் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) பேசும் போது வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி மீண்டும் மேலவை கொண்டுவரப்படும்; அதற்கான தீர்மானம் விரைவில் இந்த அவையில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 12ம் தேதி மேலவை அமைப்பதற்கான தீர்மானத்தை பேரவையில் முதல்வர் கருணாநிதி முன் மொழிந்தார். வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 155 பேரும், எதிர்த்து 61 பேரும் வாக்களித்தனர்.
மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்குப் பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோலவே மக்களவையிலும் கடந்த 6ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட் டதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மேலவை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மேலவை உருவாக்கும் பணிகளை கவனிப்பதற்காக சிறப்பு அதிகாரியை நேற்று நியமித்தது. இதுகுறித்து சட்டப் பேரவை செயலாளர் மா.செல்வராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சட்டமன்ற மேலவையை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக ‘சிறப்பு பணிக்கான அதிகாரி’ பதவி ஒன்று உருவாக்கப்படுகிறது. மேலவை தொகுதி வரையறை, மேலவைக்கான தேர்தல் ஆகிவை தொடர்பாக, இந்த அதிகாரி பொதுத் துறை (தேர்தல் பிரிவு) அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்.
இந்த அதிகாரியின் பதவிக் காலம் தற்காலிக அடிப்படையில் ஒரு வருடத்திற்கு இருக்கும். இந்த பதவிக்கு சட்டப் பேரவையின் இணைச் செயலாளராக இருக்கும் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment