மத்திய அரசு உத்தரவு: விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிப்பு
Updated 5/15/2010 10:19:52 AM
புதுடெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 1992ல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் இருந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்துடன் நடந்த போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. அதன் பிறகு எஞ்சியுள்ள அந்த இயக்கத்தின் தலைவர்களும், போராளிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி செய்வதாக உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவிக்கை வெளியிட்டது. நடைமுறைப்படி இந்த அறிவிக்கை டிரிபியூனல் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
No comments:
Post a Comment