ராமேஸ்வரம் : நடுக்கடலில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். புயல் மழை தடைக்குப்பின், ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்துறை அனுமதி பெற்று 500க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றன . கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர் , படகுகளை வழிமறித்து, மீன்பிடி வலை, போட்பலகைகளை வெட்டி கடலில் வீசினர். மீனவர்கள் ஜஸ்டின், ஹெட்டர் படகு உட்பட 20 க்கும் மேற்பட்ட படகின் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. மேலும்," இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது,' என எச்சரித்ததை தொடர்ந்து, வேறு பகுதிக்கு சென்று மீன்பிடித்து திரும்பினர். இது போல் மற்றொரு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் ,மீனவர்களை வழிமறித்து விரட்டியதால் மீன்பாடு இல்லாமல் ஏராளமான மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.
நேற்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்த மீனவர்களில் டால்வின் கூறியதாவது:இரவு எட்டு மணிக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது ,அங்கு வந்து இலங்கை கடற்படையினர், எங்களது படகை வழிமறித்து ,பெரிய வாளால் மீன்பிடி வலையை வெட்டி கடலில் போட்டனர், என்றார். புயல் மழைக்கு பின் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு, நேற்று குறைந்த அளவே இறால் மீன்பாடு கிடைத்துள்ளது.ஒரு சில படகுகளில் கூடுதலாக நண்டுகளும் கிடைத்துள்ளன. "இந்நிலை தொடர்ந்தால், மீண்டும் படகுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்,' என, மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment